மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எவ்வித போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மஜ்தபா கமேனி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பிறகு அவர் விடுத்துள்ள முதல் பொது அறிவிப்பில், ஈரானின் நிலைப்பாட்டை மிகக் கடுமையாகப் பதிவு செய்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் எக்காலத்திலும் அமெரிக்காவுடன் எவ்வித உடன்படிக்கையையும் அல்லது போர்நிறுத்தத்தையும் ஏற்காது என அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையே நிலவும் மோதலைத் தணிக்க, இரண்டு நாடுகள் (பெயர்கள் குறிப்பிடப்படவில்லை) ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய முயன்றன. ஆனால், இந்த போர்நிறுத்த முன்மொழிவுகளை மஜ்தபா கமேனி முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். ஈரானுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். நிரந்தரப் போர்நிறுத்தம் உறுதி செய்யப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என ஈரான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது தந்தையின் கொள்கையையே தீவிரமாகப் பின்பற்றும் மஜ்தபா கமேனி, ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவில் உறுதியாக உள்ளார். இதனால் சர்வதேச எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ஈரான் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் ஈரானின் இந்த பிடிவாதமான போக்கினால், மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து, போர் மேலும் நீண்ட காலத்திற்குத் தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
