ஈரானின் மிக உயரிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நெருங்கிய ஆதரவாளரும், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படை முன்னாள் தலைவருமான அலி லாரிஜானி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான கோலம்ரேசா சோலேமானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஈரானின் ‘பசிஜ்’ (Basij) படைப்பிரிவை வழிநடத்தி வந்த இவர், தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய துல்லியமான தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் இன்று 18-வது நாளை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் 3-வது வாரமாகத் தொடரும் நிலையில், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. இந்த மோதலால் சர்வதேச எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாவதற்கு ஒரு நாள் முன்னதாக (திங்கட்கிழமை), அலி லாரிஜானி இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு முக்கிய செய்தியை விடுத்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, “ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளன. இதில் பொதுமக்களும், ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய மக்கள் இந்த ஆக்கிரமிப்பைத் தீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். இக்கட்டான இந்தச் சூழலில், இஸ்லாமிய நாடுகள் ஈரானுக்கு ஏன் இன்னும் தகுந்த ஆதரவை வழங்கவில்லை என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும் அலி லாரிஜானியின் மரணம் குறித்து ஈரான் அரசு தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
