மேற்கு ஆசியாவில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சூழ்ந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய பாகிஸ்தான் மேற்கொண்ட ராஜதந்திர முயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.
அமெரிக்காவின் ஆதரவுடன் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கைகளை “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ஈரான் திட்டவட்டமாக நிராகரித்ததோடு, பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதுக்குழுவைச் சந்திக்கவும் மறுத்துவிட்டது. இதனால் இஸ்லாமாபாத் தற்போது இந்த விவகாரத்தில் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலக நாடுகளின் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைப் பல ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை, பிராந்தியத்தில் பெரும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான தளவாட விநியோகத்தைத் தடுத்து நிறுத்துவதே தங்களின் முதன்மை நோக்கம் என ஈரானியப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாகத் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், ஈரானிய வான்பரப்பில் அமெரிக்காவின் F-15E மற்றும் A-10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அமெரிக்க விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காணாமல் போன வீரர் சிறைபிடிக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மௌனம் காத்து வரும் வேளையில், இஸ்ரேலின் முக்கிய இராணுவத் தளங்கள் மீது தனது 93-வது அலைத் தாக்குதலைத் துல்லியமாக நடத்தி முடித்துள்ளதாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி (IRGC) அறிவித்துள்ளது. ஹைஃபா மற்றும் மேற்கு கலிலேயா பகுதிகளில் ஈரானின் ஏவுகணைகள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியுள்ளன.
பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது கத்தார் நாடு இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணப் புதிய மத்தியஸ்த முயற்சியைத் தொடங்கியுள்ளது சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுபுகிறது.
