ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாட்டை மட்டுமின்றி ஆணுறை உற்பத்தியிலும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஆணுறைகள் தயாரிக்கத் தேவைப்படும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள், சிலிக்கான் எண்ணெய் மற்றும் அம்மோனியா போன்ற மூலப்பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இவற்றின் விலை 50 சதவீதம் வரை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுமார் 8,170 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ஆணுறை சந்தை, கடல்வழிப் போக்குவரத்து முடக்கம் மற்றும் மூலப்பொருள் விலை உயர்வால் தற்போது கடும் சிக்கலைச் சந்தித்து வருகிறது.
உலகளவில் ஆணுறை உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. இயற்கை ரப்பர் தாராளமாகக் கிடைப்பது, நவீன தொழில்நுட்பம், மலிவான உழைப்பு மற்றும் அரசின் ஆதரவு போன்ற காரணங்களால் தாய்லாந்து உலக சந்தையில் 44 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது.
அமெரிக்கா, சீனா உட்பட 176 நாடுகள் தாய்லாந்திடமிருந்து ஆணுறைகளை இறக்குமதி செய்கின்றன. இருப்பினும், தற்போது நிலவும் போர்ச் சூழலால் பேக்கேஜிங் பொருட்களான அலுமினியம் ஃபாயில் மற்றும் பிவிசி தாள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விநியோகச் சங்கிலி பாதிப்பு, வரும் நாட்களில் ஆணுறை விலையை உலகெங்கும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
