அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பதற்றம், தற்போது நேரடிப் போராக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலுள்ள முக்கிய ராணுவ மையத்தின் மீது ஆப்கானிஸ்தான் வான்படை அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், இஸ்லாமாபாத்தின் ஃபைசாபாத் பகுதியில் அமைந்துள்ள ‘ஹம்சா’ (Hamza) என்ற முக்கிய ராணுவ மையத்தின் மீது ஆப்கான் வான்படை தாக்குதல் நடத்தியது. ட்ரோன் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டளை மையம், ஆயுதக் கிடங்கு மற்றும் வீரர்கள் தங்கும் விடுதிகள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ‘டியூரண்ட் எல்லைக் கோடு’ (Durand Line) பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் முற்றியிருந்தது. முன்னதாக, ஆப்கானிஸ்தானின் காபூல், பக்தியா மற்றும் கந்தஹார் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. “கசாப் லில் ஹக்” என்று பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலில், பொதுமக்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டதாகவும், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, தற்போது பாகிஸ்தான் தலைநகருக்கு அருகிலேயே ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவ வட்டாரங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்தத் தாக்குதல் குறித்த செய்தியை பாகிஸ்தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இஸ்லாமாபாத் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்நாட்டு உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, இஸ்லாமாபாத் எல்லைகளைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். நகருக்குச் செல்லும் முக்கிய சாலைகள் மூடப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சீனா தலையிட்டு சமரச முயற்சியில் இறங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முல்லா அமீர் கான் முத்தகி, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யுடன் தொலைபேசி வாயிலாக ஆலோனை நடத்தினார்.மேலும் ராணுவ மோதல்களைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணுமாறு சீனா இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
