பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மீது பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஹமீசா முக்தார் என்ற பெண், பாபர் அசாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.15 கோடி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு (FIR) செய்ய வலியுறுத்தி ‘ஜஸ்டிஸ் ஆப் பீஸ்’ அலுவலகத்தின் மூலம் அவர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாபர் அசாம் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பாபர் அசாம் தரப்பில் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கின் இறுதி விசாரணை லாகூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பாபர் அசாம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாரிஸ் அஸ்மத் வாதாடுகையில்:

“இந்த புகார்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை. பாபர் அசாமின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து, அவரிடமிருந்து ரூ.15 கோடி பணத்தைப் பறிக்கும் நோக்கிலேயே இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் பாபர் அசாமுக்கு எதிராக சட்டப்படி போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.