இந்திய ரயில்வே தனது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் வகையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ‘யுடிஎஸ்’ மொபைல் செயலியை வரும் மார்ச் 1 முதல் அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. புறநகர் மற்றும் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை எடுப்பதற்குப் பயன்பட்ட இந்தச் செயலிக்கு மாற்றாக, அனைத்து ரயில் சேவைகளையும் உள்ளடக்கிய ‘ரயில்ஒன்’ என்ற புதிய ‘சூப்பர் ஆப்’ பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்த புதிய செயலியில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஏற்கனவே யுடிஎஸ் மற்றும் ரயில் கனெக்ட் செயலிகளில் பயன்படுத்திய அதே லாக்-இன் விவரங்களைக் கொண்டே பயணிகள் இதில் எளிதாக உள்நுழைய முடியும்.
இந்நிலையில் ரயில் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘ரயில்ஒன்’ செயலியில், ரயில்களின் தற்போதைய இருப்பிடம், பி.என்.ஆர் நிலை, உணவு ஆர்டர் செய்தல் மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் ‘ரயில் மதாத்’ போன்ற வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ரயில்ஒன் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே யுடிஎஸ் செயலியில் உள்ள ஆர்-வாலட் இருப்புத் தொகை வீணாகாது என்றும், அது தானாகவே ரயில்ஒன் செயலியுடன் இணைக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் இனி பல்வேறு தேவைகளுக்காகப் பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
