தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவி விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் வகுப்பறையில் பாம்பு கடித்ததில் பதினோராம் வகுப்பு மாணவர் பலியான துயரம் மறைவதற்குள், மீண்டும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியப்போக்கையே காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை எளிய மாணவர்கள் பயிலும் பள்ளிகள் என்பதால், அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மதிய உணவில் புழுக்கள் இருப்பது போன்ற புகார்கள் மாணவர்களின் உயிரோடு விளையாடும் செயலாக உள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் செயல்படும் திமுக அரசை மக்கள் விரைவில் துரத்தியடிப்பார்கள் என்றும் தனது அறிக்கையில் நயினார் நாகேந்திரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
