நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் ‘இண்டியா’ கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்கிற கோபத்தில், காங்கிரஸ் தலைமையில் 118 எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதற்கு திமுக, சமாஜ்வாடி போன்ற கட்சிகள் பச்சைக்கொடி காட்டினாலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மட்டும் இந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.
“நேரடியாகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதில், முதலில் சபாநாயகருக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதி, மூன்று நாள் அவகாசம் கொடுக்கலாம்” என அபிஷேக் பானர்ஜி ஒரு புதிய ஐடியாவைக் கொடுத்துக் காங்கிரஸைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார். டிஎம்சியின் இந்தத் திடீர் முரண்பாடு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், தேவையான எண்ணிக்கையில் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதால், இந்தத் தீர்மானத்தை விரைவில் லோக்சபா பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் பாஜக அரசு “எதிர்க்கட்சியிடம் போதிய பலம் இல்லை” என நக்கல் செய்து வரும் வேளையில், மறுபுறம் கூட்டணிக் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள இந்தச் சலசலப்பு ராகுல் காந்திக்கு ஒரு பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.
