திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி ஒன்றின் சீருடையில், மாணவிகள் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வட்டமாக அமர்ந்து, ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் மதுபானத்தை ஊற்றி, அதில் தண்ணீரைக் கலந்து மற்ற மாணவிகளுக்குக் கொடுப்பதும், ‘சியர்ஸ்’ செய்துவிட்டு அனைவரும் குடிப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

இந்த வீடியோ குறித்துப் பாளையங்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், அது பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி வகுப்பறை தான் என்பதும், மது அருந்தியவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவிகள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில், மற்ற மாணவிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் குழுவாக அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம் அந்த மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளித்ததுடன், மது அருந்திய 6 மாணவிகளைச் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.