திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில், வகுப்பறைக்குள் மாணவிகள் சிலர் மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி சீருடையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்து, மதுபானம் அருந்தும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை ஊற்றி, அதில் தண்ணீர் கலந்து சக மாணவிகளுக்கு வழங்குவது, பின்னர் அனைவரும் ‘சியர்ஸ்’ செய்து குடிப்பது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வகுப்பறை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளிக்குச் சொந்தமானது என்பதும், வீடியோவில் இடம்பெற்ற மாணவிகள் அதே பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில், மதுபானம் அருந்திய மாணவிகள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது தெரியவந்தது. மேலும், விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், பள்ளி வளாகத்தில் காலியாக இருந்த வகுப்பறையில் தற்காலிகமாக விடுதி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அந்த நேரத்தில் மற்ற மாணவிகள் உணவு எடுத்துக்கொண்டிருந்த நிலையில், சில மாணவிகள் குழுவாக அமர்ந்து மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து கவுன்சிலிங் வழங்கியது. பின்னர், அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறி, 6 மாணவிகளை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளது. இதற்கிடையே, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்குவதுடன், மாணவிகளுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
