உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டம் கஜுர்ஹாட் பகுதியை சேர்ந்த மனிஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் முஸ்லிம் பெண் ஒருவராக நடித்து, குஜராத்தைச் சேர்ந்த திருமணமான முஸ்லிம் இளைஞனை காதலனாக மாற்றி மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் குரலில் பேசுவதில்  வல்லவராக இருந்த மனிஷ், காதலனுடன் மணிக்கணக்கில் பேசுவதுடன், “கணவரால் அடிக்கப்படுகிறேன்” என்ற சோகக்கதைகளைக் கூறி, பலமுறை ரூ.40,000 ரூபாயாக பல தவணையில் மொத்தம் ரூ.1.40 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.

பல மாதங்களாக காதலனை விட்டு விலக நினைத்த மனிஷ், தனது காதலனை நேரில் சந்தித்து, பர்தா அணிந்து கல்யாணம் செய்வதற்காக திட்டமிட்டுள்ளார். இருவரும் லக்னோ ரயில் நிலையம் வரை வந்தனர். அங்கு பர்தா அணிந்த நிலையில் இருந்த மனிஷ் மீது சந்தேகம் கொண்ட CRP போலீசார் இருவரையும் விசாரணைக்கு எடுத்தனர். பர்தா அணிந்திருந்த மனிஷை பெண் போலீசார் தனியாக விசாரித்து, முகத்தை காட்டுமாறு கேட்டபோது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. பர்தாவை கழற்றியதும், மனிஷ் ஆண் என்பதும், தனது காதலனையும் ஏமாற்றியதை கூறி மனிஷ் காவல்துறையினரிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டதும், காவல்துறையினர் அவரை எச்சரித்து விட்டுவிட்டனர்.

மீண்டும் ரயிலில் ஒன்றாக பயணித்த இருவரும், உண்மை தெரியவந்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக சமாதானமாக ஒப்புக்கொண்டனர். மனிஷ் தனது காதலனுடன் குஜராத்தின் சன்வர் காந்தா பகுதியில் குடியேறி, ஷட்டரிங் வேலை செய்து வந்தார் இதே நேரத்தில், மனிஷின் குடும்பத்தினர் “அவரை கடத்தி சிறுநீரகத்தை எடுக்க முயற்சிக்கின்றனர்” எனக் கூறி குஜராத்தில் உள்ள காதலர் மீது அயோத்தி போலீசில் புகார் அளித்தனர்.

இரு சமுதாயங்கள் தொடர்புடைய பிரச்சனை என்பதால், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். குஜராத் காவல்துறை உதவியுடன், மனிஷ் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, விசாரணையின் பிறகு முழுமையான உண்மை தெரியவந்தது. இரு தரப்பினரும் பணத்தை திருப்பி கொடுத்ததால், எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.