மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினேஷ் சிங் – குட்டன் தேவி தம்பதி. சம்பவத்தன்று இந்த தம்பதி வீட்டுக்கு வெளியே படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில், விஷமுள்ள கருப்பு பாம்பு அவர்கள் அருகே வந்து, முதலில் தினேஷ் சிங்கின் கையிலும், பின்னர் குட்டன் தேவியின் கழுத்தில் காதுக்கு கீழேயும் கடித்தது. இரவு முழுவதும் இருவரும் வலியில் துடித்தபோதும், யாருக்கும் இது தெரியவில்லை. காலையில் உறவினர்கள் வெளியே வந்தபோது, இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அருகே பாம்பும் இருந்தது. உடனே இருவரையும் குவாலியர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தினேஷ் சிங் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குட்டன் தேவியின் நிலைமை மோசமாக இருப்பதால், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்கின்றனர். காவல்துறை விசாரணை தொடங்கி, இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மழைக்காலத்தில் பாம்புகள் அதிகமாக தென்படுவதாகவும், ஆனால் இதுபோன்ற பயங்கரமான சம்பவம் இதுவரை நடக்கவில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவில் வெளியே தூங்குவதற்கு மக்கள் பயப்படுகின்றனர். பாம்புகளைப் பிடிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் நிர்வாகத்தையும், வனத்துறையையும் கிராமவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.