இந்திய 19 வயதுக்குட்பட்டோர் (U19) அணியின் அதிரடி தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் துணிச்சலான ஆட்டத்தைப் பாராட்டியுள்ள முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத் தூணாகத் திகழ்வார் எனப் கணித்துள்ளார்.

கடந்த 2025 ஏப்ரல் மாதம், தனது 14-வது வயதிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் வைபவ் சூர்யவன்ஷி. குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதமடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை தொடரில் ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணியில் வைபவ் முக்கிய வீரராகத் திகழ்ந்து வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் ஒரு அரைசதம் (72 ரன்கள்) உட்பட மொத்தம் 114 ரன்களை அவர் குவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

வைபவ் குறித்து ஐசிசி வெளியிட்ட வீடியோவில் யுவராஜ் சிங் கூறியிருப்பதாவது: “வைபவ் ஒரு அபாரமான திறமைசாலி. பயமற்ற அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வலைப்பயிற்சியின் போது அதிவேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை எவ்வித தயக்கமுமின்றி அவர் எதிர்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, கழுத்து உயரத்திற்கு வரும் வேகப்பந்துகளை அவர் ‘ஹூக்’ மற்றும் ‘புல்’ ஷாட்கள் ஆடும் விதம் பிரம்மிக்க வைக்கிறது. பலமான அணிகளுக்கு எதிராக அவர் தனது நிலைத்தன்மையை நிரூபிக்கும்போது, இந்திய அணியின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார் என்றார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த மிக இளம் வீரர் வைபவ் ஆவார். இதுவரை விளையாடியுள்ள 21 இளையோர் ஒருநாள் போட்டிகளில் (Youth ODIs) 1,087 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் அடித்துள்ள பவுண்டரிகளைவிட (83) சிக்ஸர்களே (86) அதிகமாக உள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய லீக் போட்டியில், 136 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது வெறும் 23 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார். மேலும் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதில் வரும் ஜனவரி 27-ஆம் தேதி ஜிம்பாப்வே அணியையும், பிப்ரவரி 1-ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்குத் தீர்மானிப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.