2026- ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்த நாட்டுத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், அனுபவ வீரர் பாபர் அசாம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் ஆக்கிப் ஜாவேத் தலைமையிலான தேர்வுக் குழு, இந்த முறை அணியில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், தனது அறிமுகத்திற்குப் பிறகு முதல்முறையாக ஒரு ஐசிசி தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் முகமது வாசிம் ஜூனியரும் அணியில் இடம்பிடிக்கவில்லை.
சமீபகாலமாக டி20 போட்டிகளில் பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் (Strike Rate) குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆசியக் கோப்பையிலும் அவர் புறக்கணிக்கப்பட்டிருந்தார். தற்போது உலகக் கோப்பைக்கு அவர் திரும்பியுள்ள நிலையில், அவர் தொடக்க வீரராகக் களமிறங்க மாட்டார் என்று பயிற்சியாளர் மைக் ஹெசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
பவர்-பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்கும் திறன் பாபர் அசாமுக்குச் சற்று குறைவாக உள்ளது. எனவே அவர் தொடக்க வீரராகக் களமிறங்குவதை நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அனுபவம் அவரிடம் உள்ளது. குறைந்த இலக்கை நோக்கி ஆடும்போது ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அவரது அனுபவம் உதவும்,” என்றார்.
பாபர் அசாமின் மந்தமான ஆட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, உயர் செயல்திறன் இயக்குநர் ஆக்கிப் ஜாவேத் கூறியதாவது: “நவீன கால கிரிக்கெட்டில் சூழலுக்கு ஏற்பவே வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பாபர் அசாம் இப்போதும் எங்களது அணியின் மிகவும் சீரான ஆட்டக்காரர் என்பதில் சந்தேகமில்லை. பிபிஎல் (BBL) தொடரில் அவர் சரியாக விளையாடாவிட்டாலும், சில குறிப்பிட்ட சூழல்களில் அவரது அனுபவம் அணிக்குத் தேவைப்படுகிறது.”
வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் ஐசிசி-க்கும் இடையிலான மோதலில் பாகிஸ்தான் ஆதரவு அளித்ததால், அவர்கள் உலகக் கோப்பையைப் புறக்கணிப்பார்கள் என வதந்திகள் பரவின. ஆனால், தற்போது அணியை முறைப்படி அறிவித்ததன் மூலம் பாகிஸ்தான் தனது பங்கேற்பை உறுதி செய்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே விளையாட உள்ளது. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
