நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பி வரும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆர். அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷனைத் தொடக்க வீரராகக் களமிறக்குவது இந்திய அணிக்குச் சரியான முடிவாக இருக்காது என்று அவர் எச்சரித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. இதில் தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், முறையே 10 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அவரை நீக்கிவிட்டு, அதிரடி வீரர் இஷான் கிஷனைத் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ள அஸ்வின் கூறியதாவது:
“சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்குவது குறித்து சிந்திப்பது மிகவும் அவசரமான முடிவாகும். ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சுவை ஓரங்கட்டிவிட்டு, தற்போது ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவது அணியின் சமநிலையைப் பாதிக்கும். இத்தகைய தேவையற்ற மாற்றங்கள் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் சூழலைச் சீர்குலைக்கும். அணியில் இடம்பிடிக்கக் கடும் போட்டி நிலவுவது ஆரோக்கியமானதுதான், ஆனால் இப்போதே இந்த மாற்றத்தைச் செய்வது சரியாக இருக்காது.”
இரண்டாவது டி20 போட்டியில் இஷான் கிஷன் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது, களமிறங்கிய அவர் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாகவே, அவரைத் தொடக்க வீரராகக் கொண்டு வர வேண்டும் என்ற விவாதம் வலுத்துள்ளது.
சஞ்சு சாம்சன் கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், உள்நாட்டுப் போட்டிகளில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 101 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்திய அணிக்காக அவர் கடைசியாக 2025 ஆசியக் கோப்பை தொடரில் ஓமன் அணிக்கு எதிராக 56 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தொடரின் பாதியிலேயே இத்தகைய அதிரடி மாற்றங்களைச் செய்வது வீரர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும் என்பதே அஸ்வினின் முக்கிய கவலையாக உள்ளது.
