அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக சதுப்பு நிலத்தில் இருந்த முதலையிடம் சிக்கிய விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. விக்டர் ரிவாஸ் என்ற நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘இன்டர்ஸ்டேட் 10’ நெடுஞ்சாலையில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் போலீசார் அவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் காரை விட்டு இறங்கி அருகில் இருந்த ஒரு சதுப்பு நிலத்திற்குள் குதித்துத் தப்பியோடினார். அப்போது தண்ணீரில் இருந்த ஒரு பெரிய முதலை மின்னல் வேகத்தில் வந்து அவரைத் தாக்கியதில், அவரது இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் முதலையிடம் கடி வாங்கிய பிறகும் தப்பியோட முயன்ற அந்த நபரை, போலீசார் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, போலீசாரின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் தப்பியோடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைக் குறித்து உள்ளூர் போலீசார் நகைச்சுவையாக, முதலை ஒன்று போலீஸ் சீருடை அணிந்து விருது பெறுவது போன்ற ஒரு AI புகைப்படத்தைப் பகிர்ந்து, “குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள், போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்று லூசியானா சதுப்பு நிலங்களில் ஒளியாதீர்கள்” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
