அமெரிக்காவில் மென்பொருள் (ஐடி) துறையில் பணிபுரியும் இந்தியப் பொறியாளர்களுக்கு இணையாக, அங்குள்ள இந்தியப் புரோகிதர்களும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அங்கு வசிக்கும் இந்தியக் குடும்பங்களின் ஆன்மீகத் தேவைகளுக்காகப் புரோகிதர்கள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதைப் பட்டியலிட்டுள்ளார்.
ஒரு சிறிய வீட்டுப் பூஜைக்கு 250 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹20,000) முதல் பெரிய அளவிலான சத்தியநாராயண பூஜைகளுக்கு 1,000 டாலர் (சுமார் ₹83,000) வரை தட்சணையாகப் பெறப்படுகிறது என்றும், இந்தியாவை விட அமெரிக்காவில் இவர்களுக்கான மவுசு மிக அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து பொறியியல் படித்துவிட்டு, அமெரிக்காவில் ஐடி ஊழியர்களாக அல்லல்படுவதை விட, அங்கு ஆன்மீகப் பணிகளைச் செய்யும் புரோகிதர்கள் மிகக் குறுகிய நேரத்தில் அசுரத்தனமான வருமானத்தை ஈட்டுகின்றனர் என அந்தப் பெண் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். வார இறுதி நாள்களில் மட்டும் சில பூஜைகள் செய்வதன் மூலம், ஒரு ஐடி ஊழியரின் மாதச் சம்பளத்தை ஒரே வாரத்தில் சம்பாதித்துவிட முடியும் என்றும், இதனால் “நாமும் இன்ஜினியரிங் வேலையை விட்டுவிட்டு இந்தத் தொழிலைக் கற்றுக்கொள்ளலாம் போலிருக்கிறது” என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருவதுடன், வெளிநாடுகளில் இந்தியப் பாரம்பரியக் கலைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் இருக்கும் பொருளாதார மதிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
