கனடாவின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் கனடா’வில், போலி ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி, கடந்த 17 ஆண்டுகளாகப் பயணிகள் விமானங்களை இயக்கி வந்த ஜெப்ரி வால் (59) என்ற முன்னாள் கேப்டனை கனடா போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
‘புராஜெக்ட் இகாரஸ்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட தீவிர மோசடிப் புலனாய்வு விசாரணையின் முடிவில் இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஜெப்ரி வால், கடந்த 2009 முதல் 2025-ல் அவர் ஓய்வு பெறும் வரை, சுமார் 17 ஆண்டுகள் கேப்டன் பணியில் நீடித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் போயிங் 767, 777 மற்றும் 787 ஆகிய மாபெரும் அதிநவீனப் பயணிகள் விமானங்கள் மூலம் சுமார் 900-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணங்களைப் பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் அவர் வெற்றிகரமாக இயக்கியுள்ளார்.
இதன் மூலம் சுமார் 2.9 மில்லியன் கனடிய டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18 கோடி) ஊதியமாகப் பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஏர் கனடா பைலட்கள் சங்கத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்துள்ளார். கடந்த 2025 மார்ச் மாதம் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான தகுதி மதிப்பீட்டு சோதனையின்போது, இவரது ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதற்கிடையே, மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தன்னிடம் இருந்த ஒரிஜினல் உரிமங்கள் திருடப்பட்டுவிட்டதாகக் காவல்துறையில் ஒரு போலிப் புகாரை அளித்து தப்பிக்க முயன்றுள்ளார் ஜெப்ரி வால். எனினும், போலீசாரின் தீவிர விசாரணையில் அவரது வீடு சோதனையிடப்பட்டுப் போலி ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜூன் 1-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீது தற்போது 5,000 டாலருக்கும் அதிகமான மோசடி, போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், ஜெப்ரி வால் விமானங்களை இயக்குவதற்கு முற்றிலும் தகுதியற்ற நபர் அல்ல என்றும், அவர் வர்த்தக விமானங்களை இயக்குவதற்குச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், 2009-ல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றபோது தேவைப்பட்ட உயர்நிலை உரிமத்தை அவர் ஒருபோதும் பெறவில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
