தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜிரலோங்கோனின் மூத்த மகளும், அந்நாட்டின் பட்டத்து இளவரசியுமான பஜ்ரகிதியாபா மஹிடோல், நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது செல்லப் பிராணிகளுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார்.
அதன் பிறகு, அவர் கோமா நிலைக்குச் சென்றார். நவீன மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் 11 அன்று இரவு அவரது உயிர் பிரிந்ததாக தாய்லாந்து அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இளவரசி பஜ்ரகிதியாபாவின் இந்த திடீர் மறைவு தாய்லாந்து மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ஆஸ்திரியாவுக்கான தாய்லாந்து தூதராகவும், ஐநா சபையின் மகளிர் நல தூதராகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு பெற்றவர் ஆவார்.
இது குறிப்பாக சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து மக்களின் அன்பைச் சம்பாதித்தவர். அவரது மறைவையடுத்து தாய்லாந்து நாடு முழுவதும் துக்க அலையில் மூழ்கியுள்ளதுடன், அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்ய அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
