மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதை கண்டித்து, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் ஐ.நா. விதிமுறைகள் மற்றும் சர்வதேச போர் சட்டங்களை மீறியது என சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, “ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் போன்ற பகுதிகளில் உள்ள அணு உற்பத்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பொறுப்பற்ற செயல். இது ஐக்கிய நாடுகள் அவையின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது. மத்திய கிழக்கு பகுதியில் நிலைத்தன்மை பெற இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். குறிப்பாக, இஸ்ரேல் தரப்பும் தன்னடக்கத்துடன் செயல்பட வேண்டும் என சீனா வலியுறுத்துகிறது,” என்றார்.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போரில், அமெரிக்காவின் பங்கு முக்கியமாக மாறி வருகிறது. சமீபத்தில் B-2 பாம்பர்ஸ் மூலம், அமெரிக்கா அதிக சக்திவாய்ந்த குண்டுகளை ஈரானில் வீசியது. இதனையடுத்து ஈரான் தரப்பில், “போரை ஆரம்பித்தது அமெரிக்கா; ஆனால் முடிவு செய்யும் உரிமை எங்களிடம் உள்ளது” என ஈரான் கடும் எச்சரிக்கைவிடுத்தது..
இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. சீனா தனது நிலைப்பாடாக, இதுபோன்ற நிலைமைகளில் சாந்தியும், பேச்சுவார்த்தையும் மட்டுமே தீர்வாகும் எனவும், சர்வதேச நாடுகளுடன் இணைந்து நிலைத்தன்மை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.
