தமிழகத்தில் வரும் 24-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. அத்துடன் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால், சென்னையில் தங்கிப் பணிபுரிபவர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தொடர் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பயணக் கட்டணத்தை வழக்கத்தை விட பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்ல வழக்கமாக வசூலிக்கப்படும் ரூ.1,800 கட்டணம், தற்போது ரூ.4,500 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் ஆம்னி பேருந்துக் கட்டணங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
ரயில்களில் இடங்கள் இல்லாத சூழலில், வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளை நாடும் பொதுமக்கள் இந்தக் கட்டண உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை காலங்களில் அரசு முறையான நடவடிக்கை எடுத்து, இந்தத் திடீர் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
