சமூக வலைதளங்களில் ஒன்றாகிய இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கும் ஒரு காணொளி, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்ற பெண் ஒருவர், அதற்கான மாதாந்திரத் தவணைத் தொகையை (EMI) நீண்ட நாட்களாகக் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்தப் பணத்தை வசூலிப்பதற்காகத் தவணை மேலாளர் (Loan Manager) நேரடியாக அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது அந்தப் பெண், தவணைத் தொகையைக் கட்டுவதிலிருந்து தப்பிப்பதற்காகத் திடீரெனச் சாமி ஆடுவது போல நடிக்கத் தொடங்கினார். சாமியே நேரில் வந்து அருள் வாக்கு கூறுவது போன்ற பாவனையில், “பணம் தானே பாலகா… என் பெண்ணிடம் கொடுத்து விடுகிறேன் பாலகா… இன்று கொடுக்கிறேன், நீ நாளை வந்து வாங்கிச் செல்!” என்று அந்த மேலாளரை நோக்கித் தெய்வீகக் குரலில் மிரட்டியுள்ளார்.

​ஆனால், அந்த மேலாளர் சற்றும் எதிர்பாராத விதமாக, அந்தப் பெண்ணின் பாவனைக்கு அஞ்சாமல் அவரும் பதிலுக்குப் பதில் அந்தப் பெண்ணிடம் கடுமையாக வாதிட்டார். பக்திக்கும் கடனுக்கும் இடையே நடந்த இந்த வினோதமான வாக்குவாதம், பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “கடனில் இருந்து தப்பிக்க இப்படியும் ஒரு வழியா?” என்று கிண்டலாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.