இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு கன்டென்ட் கிரியேட்டர் “கோவிலுக்கு வெளியே திலகம் வைப்பதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?” என்று ஒரு நேரடிப் பரிசோதனையில் இறங்கினார். வெறும் சந்தனம் மற்றும் ரோலியை வாங்கிக்கொண்டு, கைவசம் ‘ஸ்ரீராம்’ என்று எழுதப்பட்ட அச்சை எடுத்துக்கொண்டு ஒரு கோவில் வாசலில் நின்றார். வருவோருக்குப் போவோருக்கு எல்லாம் நெற்றியில் அழகாகத் திலகம் இட்டு, அதற்கு ஒரு நபருக்கு 10 ரூபாய் என்று கட்டணம் வசூலித்தார். மக்கள் பலரும் மகிழ்ச்சியோடு திலகம் இட்டுக் கொண்டு காசு கொடுக்க, ஒரு பெரியவர் மனதார 100 ரூபாயே கொடுத்துவிட்டுச் சென்றார்.
நாளின் இறுதியில் அந்த நபர் காசை எண்ணிப்பார்த்த போது மொத்தம் 2,000 ரூபாய் சேர்ந்திருந்தது. இதை அப்படியே கணக்குப் போட்டால், மாதம் 60,000 ரூபாய், வருஷத்துக்கு 7,20,000 ரூபாய்! ஒரு பெரிய படிப்பு படித்துவிட்டு கைநிறையச் சம்பளம் வாங்கும் ஐடி ஊழியரின் வருமானத்தையே இந்த ‘திலக வியாபாரம்’ ஓரம் கட்டிவிட்டது. “இதுக்கு எதுக்குடா கஷ்டப்பட்டு படிக்கணும்? பேசாம இந்த பிசினஸ்லயே இறங்கிடலாம் போலயே” என நெட்டிசன்கள் பலரும் கமெண்டுகளைத் தட்டி வருகிறார்கள்.
