பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் சாலையோரக் கடைகள் தான் பல ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கின்றன. அப்படி ஒரு பழக்கடையில் வியாபாரம் குறைந்த போது, ‘கார்த்திக்’ என்பவர் செய்த ஒரு சிறிய உதவி, இன்று அந்த வியாபாரியின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது. அந்தப் பழ வண்டியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சின்ன கையெழுத்துக் குறிப்பு (Note) தான் இப்போது இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது.

​அந்தக் குறிப்பில், “இந்தக் குறிப்பின் மூலம் உங்களது வியாபாரம் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று நான் இந்த வியாபாரியிடம் வாக்குறுதி அளித்துள்ளேன். அதனால் தயவுசெய்து இவரிடம் பழங்களை வாங்குங்கள்” என்று கார்த்திக் மிகவும் எதார்த்தமாக எழுதியிருந்தார். எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல், ஒரு சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட இந்த வரிகள் மக்களின் இதயத்தைத் தொட்டுள்ளது.

இதனால் பலரும் அந்த வண்டியில் பழங்களை வாங்குவதுடன், அந்தப் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பதிவில் கார்த்திக் என்பவரே வந்து கமெண்ட் செய்துள்ளார். அவர் யார் என்பது இன்னும் ரகசியமாக இருந்தாலும், அவரது இந்தச் செயல் ஒரு சிறிய வியாபாரியின் வாழ்க்கையில் பெரிய ஒளியை ஏற்றியுள்ளது.