பாட்னாவில் உள்ள பாரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் விஷால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த அந்தச் சிறுவன், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்களும் உள்ளூர் மக்களும் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். மருத்துவமனை ஜன்னல்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, சிறுவனின் உடலைச் சாலையில் வைத்து மக்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது.

​இந்த மரணத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு அதிரடி புகார்கள் எழுந்துள்ளன. சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்காமல் வென்டிலேட்டரில் வைத்து 5 லட்சம் ரூபாய் வரை பில் வசூலித்ததாகவும், சிகிச்சையின் போது சிறுவனின் சிறுநீரகம் (Kidney) திருடப்பட்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும், ஒரு போலீஸ் அதிகாரியின் மகனால் தான் சிறுவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.