உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள உமர்பூர் கிராமத்தில், இரண்டு இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்வதற்காக 200 அடி உயரமுள்ள அரசு குடிநீர் தொட்டியின் மீது ஏறி உள்ளனர். அவர்கள் தொட்டியின் மேலே ஏறியது மட்டுமின்றி, கிராமம் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீருக்குள் குதித்து நீச்சல் அடித்து விளையாடியுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

​இதனைப் பார்த்த கிராம மக்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். ஊர் மக்கள் அனைவரும் குடிக்கும் தண்ணீரில் இப்படி அசுத்தமாக குளிப்பது நோய்த்தொற்றுகளை உருவாக்கும் என்றும், ஒருவேளை யாராவது விஷம் போன்ற பொருட்களைத் தொட்டியில் கலந்துவிட்டால் நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் சுகாதாரத்தோடு விளையாடிய அந்த இளைஞர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.