உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனின் பாவுவாலா பகுதியில், ஒரு புதுப்பெண்ணைத் தடுத்து வைத்து அவரது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் நடத்தியுள்ள அப்பட்டமான சித்திரவதை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின்படி, கடந்த ஜூலை 2025 முதல் மே 2026 வரையிலான சுமார் 10 மாதங்களாக அந்தப் பெண் ஒரு அறையிலும், கழிவறையிலும் மிருகத்தனமாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சித்திரவதை காலத்தில் அவருக்கு உணவாக வெறும் பச்சை அரிசி, வெங்காயம் மற்றும் மிளகாய் மட்டுமே கொடுக்கப்பட்டதால் அவரது மனநிலையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நாற்காலி, வைப்பர் மற்றும் கம்புகளால் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளதுடன், அந்தப் பெண்ணின் ரகசிய உறுப்புகளிலும் பாட்டில் மற்றும் கம்புகளால் தாக்கி கொடூரத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்தப் பெண்ணிற்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவரது பெற்றோரை குழந்தைகளையோ, மகளையோ பார்க்க விடாமல் கணவர் ராகுல் கந்துரி மற்றும் அவரது குடும்பத்தினர் தடுத்துள்ளனர்.

பெற்றோர் போன் செய்யும் போதெல்லாம் மகள் குளிக்கிறாள் அல்லது தூங்குகிறாள் எனப் பொய் சொல்லி ஏமாற்றியதோடு, நேரில் சென்றபோது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.