பிகார் மாநிலத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு 84 வயது முதியவரான தீப் ராய் என்பவரைக் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது.

ராகவ்பூர் கிராமத்தில் கடந்த 1992 நவம்பர் 10 அன்று அதாலத் ராய் மற்றும் அவரது மனைவி ராம்சாகி தேவி ஆகியோரின் வீட்டின் அருகேயுள்ள பாதையில் உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போடுவது தொடர்பாக இருதரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

<a href=”http://

“>

இதனைத் தட்டிக்கேட்ட தம்பதியினரை, தீப் ராய் தனது குடும்பத்தினர் மற்றும் ஆயுதம் ஏந்திய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக 1993-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 1999-இல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நீண்டகால சட்டப் போராட்டத்தின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 4 குற்றவாளிகள் மரணமடைந்த நிலையில், தற்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது அரசுத் தரப்பில் 10 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. சான்றுகளை முழுமையாக ஆய்வு செய்த கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி, முதியவர் தீப் ராயைக் கலவரத்தில் ஈடுபடுதல், கொடிய ஆயுதங்களுடன் கலவரம் செய்தல் மற்றும் கொலை முயற்சி (IPC 307) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தார்.

இதற்கிடையே, உடல்நலம் குன்றி மிகவும் பலவீனமாகக் காணப்படும் தீப் ராய், மற்றவர்களின் உதவியுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், குற்றவாளி தீப் ராய்க்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கான இறுதி விசாரணையை நீதிமன்றம் ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.