போபாலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகையும் மாடலுமான த்விஷா ஷர்மாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், சிபிஐ அதிகாரிகள் அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோரிடம் 72 மணி நேரத்தில் 72 கூர்மையான கேள்விகளைக் கேட்டு தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இவர்களின் காவல் காலம் முடிவடையும் நிலையில், சம்பவ இடத்தை மீண்டும் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் இருவரின் வாக்குமூலங்களிலும் அப்பட்டமான முரண்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த விசாரணையில் திருமண வாழ்க்கை, வரதட்சணை புகார், கருக்கலைப்பு, சொத்து விவகாரம், த்விஷாவின் மனநலம் மற்றும் சம்பவத்தன்று தம்பதியினர் தனித்தனி அறைகளில் உறங்கியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும், த்விஷா உயிரிழந்த பிறகு காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்காதது மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதற்கான காரணங்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் இவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த மாமியார் கிரிபாலா, சாதிப் பாகுபாடு இன்றி த்விஷாவைத் தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொண்டதாகவும், ஆரம்பத்தில் நன்றாக இருந்த த்விஷாவின் குணம் காலப்போக்கில் மாறியதுடன் அவர் ஆளுமைக் கோளாறு உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய கணவர் சமர்த், சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டுத் தொலைக்காட்சி பார்த்ததாகவும், த்விஷா தூக்கில் தொங்கியதைக் கண்டு அவரை மீட்டு சிபிஆர் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
த்விஷா தொடர்ந்து குழந்தையைப் பற்றிப் பேசியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தனித்தனி அறைகளில் உறங்கியதாகச் சமர்த் கூறிய நிலையில், த்விஷாவின் உடலில் இருந்த காயங்கள் குறித்து மாமியார் கிரிபாலாவிடம் கேட்டதற்கு அவரிடமிருந்து முறையான பதில்கள் எதுவும் வரவில்லை. இந்த வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, சிபிஐ தரப்பில் இவர்களின் காவலை நீட்டிக்க இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
