ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியங்காடு பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்கவி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் ‘ரிதன்யா’ என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் ஆசை மகளின் வருகையைக் கொண்டாடி வந்த இந்த இளம் தம்பதியின் மகிழ்ச்சி, ஒரே நாளில் பேரதிர்ச்சியாக மாறியுள்ளது.

நேற்று அதிகாலை நேரத்தில் குழந்தை ரிதன்யா பசியால்  அழுதுள்ளது. உடனே தாய் பார்கவி, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவிட்டுத் தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, குழந்தையைத் தூக்குவதற்காகப் பார்கவி சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தை ரிதன்யா எவ்வித அசைவும் இன்றி படுத்திருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பதறியடித்தபடி அருகில் இருந்த கிராமச் செவிலியரை வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தையைப் பரிசோதித்துள்ளனர்.

உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தாய்ப்பால் கொடுத்த பிறகு குழந்தைக்கு புரை ஏறியதால் உயிரிழந்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையைக் கட்டியணைத்துக் கண்ணீர் விட்டு கதறியது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது. இ