மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆன்மீக வழிபாட்டின் போது, சுமார் 11,000 லிட்டர் பால் மற்றும் 210 புடவைகள் நர்மதை நதியில் நற்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) தற்போது அதிரடியாகக் களமிறங்கியுள்ளது.

ஆற்றில் கொட்டப்பட்ட இந்த பொருட்களால் நதி நீர் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவியல் பூர்வமான விரிவான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய மற்றும் மத்தியப் பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நதியில் பால் போன்ற கரிமப் பொருட்களை அதிகளவில் கொட்டும் போது, அது தண்ணீரில் உள்ள உயிரியல் ஆக்ஸிஜன் தேவையை (BOD) அதிகரித்து, ஆற்றுக்குள் வாழும் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தீர்ப்பாயம் கவலை தெரிவித்துள்ளது.

நீர் மாசு தடுப்புச் சட்டம் 1974-ன் படி, நீர்நிலைகளில் இது போன்ற மாசு ஏற்படுத்தும் பொருட்களைக் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.