நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், பிப்ரவரி மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சசிகலா, ஜூன் 15-ம் தேதியன்று விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார். இந்நிலையில், ஜூன் 15-ம் தேதி விசாரணையின் போது நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது தங்களின் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை என்பதால், இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியிடவோ அல்லது விவாதிக்கவோ தடை விதிக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிட முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஜூன் 15-ம் தேதிக்குப் பிறகே வழக்கின் அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தெரியவரும்.
