புதுச்சேரி தேர்தல் பரப்புரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர் பெயருக்குப் பதிலாக பாஜக வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு, “விஜய் இன்னும் அரசியலில் ஒரு குழந்தை தான்.
அவர் நேற்றைய தினம் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார், அவரை விட்டுவிடுங்கள்; நாம் அரசியல் தெரிந்தவர்களைப் பற்றிப் பேசலாம்” என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார். மேலும், “யாருக்கு வாக்கு சேகரிக்கிறோம் என்று கூடத் தெரியாமல், எங்கள் கட்சி வேட்பாளர் பெயரைக் குறிப்பிட்டு விஜய் பேசியிருக்கிறார். இதன் மூலம் விஜய்யின் ஆழ்மனதில் பாஜக தான் இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது” என்று குஷ்பு அதிரடியாகக் கூறியுள்ளார்.
சொந்த கட்சி வேட்பாளர் பெயரையே சரியாகச் சொல்லத் தெரியாத ஒருவர் எப்படி அரசியலில் சோபிக்கப் போகிறார் என்ற ரீதியில் அவர் முன்வைத்த விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. விஜய்யின் இந்தச் சிறு தடுமாற்றத்தைப் பாஜக தரப்பு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருவது புதுச்சேரி அரசியலில் அனலை கூட்டியுள்ளது.
