திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது குறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பண்ருட்டியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு தன்னை அவமதித்ததாகவும், அரசு விழாக்களில் கூட தனது பெயரைப் புறக்கணித்ததாகவும் வேதனை தெரிவித்தார்.

இது குறிப்பாக, தான் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து வந்தவன் என்பதால், தர்மபுரி தொகுதியில் சவுமியா அன்புமணியை எதிர்த்துப் போட்டியிடுமாறு திமுகவின் அமைச்சர் ஒருவர் தன்னை வற்புறுத்தியதாகவும், இத்தகைய உள்நோக்கம் கொண்ட செயல்களால் அதிருப்தி அடைந்து கூட்டணியை விட்டு விலகியதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனது 10 அம்சக் கோரிக்கைகளுக்கு திமுக அரசு செவிசாய்க்கவில்லை என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தனக்கு மோதலை உருவாக்க திமுக முயற்சிப்பதாகவும் வேல்முருகன் விமர்சித்தார்.

மேலும்”இனி வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், ஒரு சில இடங்களுக்காக மற்ற கட்சிகளிடம் கையேந்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை” என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். கேமரா சின்னத்தில் களம் காணும் தமிழக வாழ்வுரிமை கட்சி, இனிவரும் காலங்களில் தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.