அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி வேட்பாளருமான செல்லூர் ராஜு தனது பாணியில் மிக காரசாரமாகப் பதிலளித்துள்ளார். “நாங்கள் ஒன்றும் பாகிஸ்தானுடன் கூட்டணி வைக்கவில்லை, பாரதிய ஜனதா கட்சியுடன் தானே கூட்டணி வைத்துள்ளோம். இந்தியாவில் உள்ள ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “திமுக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது அவர்களுக்கு இனிப்பாக இருக்கிறது, ஆனால் அதிமுக ஒரு கூட்டணியை உருவாக்கினால் மட்டும் ஏன் இவர்களுக்குக் கசக்கிறது?” என்று சாடினார். திமுக அரசு தனது தோல்விகளை மறைக்க அதிமுக-வின் கூட்டணி குறித்து அவதூறு பரப்புவதாகவும், தாங்கள் எப்போதும் நாட்டின் நலன் கருதியே தோழமை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், செல்லூர் ராஜுவின் இந்த “பாகிஸ்தான்” ஒப்பீடு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
