அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நிர்வாகிகள் சிலரால் சி.வி சண்முகத்தை விமர்சித்த ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தேர்தல் முடிந்த நாளிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிர்ச்சி கொண்டுள்ள நிலையில் பொதுக்கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
ஏற்கனவே அவரது தலைமையில் கிட்டத்தட்ட 25 எம்எல்ஏக்கள் வரை பிரிந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பின்னர் 5 பேர் பதவியை ராஜினாமா செய்ய மீதம் உள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் மீண்டும் இணைந்தனர். இருப்பினும் அதிமுகவில் சில அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் பக்கம் நிற்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகனை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி நாடகமாடுவதாக சி.வி சண்முகம் அண்மையில் விமர்சித்திருந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தின் போது அவரை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில் அன்று கும்பலாக வந்து ஊளையிட்ட குடிகார குள்ளநரி, இன்று அனாதையாக வந்து ஓலம் விடும் குடிகார குள்ளநரி. எத்தனை குடிகார குள்ளநரிகள் ஊளையிட்டாலும் சிங்கத்தமிழர் எடப்பாடி யாரின் முன் குள்ளநரிகள் ஊளை எடுபடாது. தொண்டர்கள் என்றென்றும் கழகப் பொதுச் செயலாளர் வலியில் வீறு கொண்டு எழுவோம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று எழுதப்பட்டுள்ளது.
