மகாராஷ்டிர மாநிலத்தில், சந்தேகப் பேயினாலும் கணவனின் தொடர் சித்திரவதையினாலும் கணவன் மனைவியைக் கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவத்தில், சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமான புதிதிலிருந்தே தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த கணவன், அவளை தினமும் கொடுமைப்படுத்தி வந்துள்ளான்.

தினமும் வீட்டில் உள்ள அனைத்துப் பாத்திரங்களையும் துலக்கச் சொல்லி சித்திரவதை செய்வதும், அதன்பிறகு தன் கால்களைப் பிடித்து அழுத்தி விடச் சொல்லி வற்புறுத்துவதும் அவனது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்தக் கொடூரமான மனநிலையின் உச்சகட்டமாக, ஒருநாள் ஆத்திரத்தில் தன் சொந்த மனைவியின் மீதே மண்ணெண்ணெயை ஊற்றி அவளை உயிருடன் கொளுத்தியுள்ளான்.

உயிருக்குப் போராடிய அந்தப் பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, காவல்துறையினரிடம் தனது கணவன் செய்த கொடூரச் செயலை வாக்குமூலமாகப் பதிவு செய்தார். அந்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்தத் தொடர் விசாரணையில், தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அந்த நபர் பல்வேறு கட்ட வழக்குகளை எதிர்கொண்ட போதிலும், மனைவியின் வாக்குமூலமும், மருத்துவ ஆதாரங்களும் அவனுக்கு எதிராக மிக வலுவாக அமைந்தன.

நீண்ட 11 ஆண்டுகள் நடைபெற்ற இந்தச் சட்டப் போராட்டத்தின் முடிவில், நீதிமன்றம் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. சந்தேகத்தின் பெயரிலும், ஆணாதிக்க மனநிலையினாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்து, அவளைக் கொடூரமாகக் கொன்ற குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைத்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது உயிரிழந்த அந்தப் பெண்ணின் ஆத்மாவிற்கு நீதி கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.