2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று நேற்று அறிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இன்று புதுச்சேரி தேர்தல் களத்தில் மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியின் ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்றும், அங்குள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லி மேலிடத் தலைவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இந்த தியாகத்தைச் செய்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், புதுச்சேரியின் உழவர்கரை தொகுதியில் மட்டும் விசிக உறுதியாகப் போட்டியிடும் என்றும், அங்குள்ள தங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கூட்டணி தர்மத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று தான் போட்டியிடவில்லை என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமாவளவன், இன்று வேட்பாளர்களை வாபஸ் பெறச் சொல்லியிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
