கடலூர் மாவட்டத்தில், வேகமாக வந்த ஒரு பேருந்து, பைக் ஓட்டி  மற்றும் பாதசாரி மீது மோதிய பயங்கர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.

இந்த சம்பவம், கடலூரின் ஒரு கிராமப்பகுதியில் உள்ள குறுகிய சாலையில் கடந்த வாரம் இடம்பெற்றது. வீடியோ காட்சிகளில், ஒரு இருசக்கர வாகன ஓட்டுநர் யு-டர்ன் எடுக்க முற்பட்ட தருணத்தில், எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த பேருந்து நேருக்கு நேர் மோதியது. பேருந்து ஓட்டுநர் திடீரென அந்த வாகனத்தை கண்டதாலும், வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாலும், பைக்கைத் தவிர்க்க முயன்றும் முடியாமல் போனது.

பேருந்து பைக்கை மோதியதிலேயே அல்லாது, அதன் பின் அருகில் நின்றிருந்த பாதசாரி மீது மோதியதில், அவரும்  உயிரிழந்தார்.  கடைசியில் அந்த பேருந்து அருகிலுள்ள வீட்டு சுவரில் மோதி நின்றது.

விபத்து நடந்ததும், பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு இணையத்தில் சிசிடிவி காட்சிகள் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த விபத்தைப் பற்றி தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பயனர், “தவறு பைக்கரிடமே இருந்தாலும், அவர் யு-டர்ன் எடுக்கும் முன் பார்ப்பது அவசியம். பேருந்து ஓட்டுநரும் வலையான பாதையை தவிர்த்து சுவறில் மோதியதிலிருந்து, பயம் காரணமாக வழிதவறியிருக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொருவர், “இது போன்ற சாலைகளில் பேருந்து ஓட்டுநர் இப்படியொரு வேகத்தில் வந்தது அசாதாரணம். இரண்டு பேரின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.