திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தன்னை உல்லாசத்துக்காக அழைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த பெண் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், போலீஸ் நிலையத்துக்கு சென்ற என்னிடம் புகார் சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் விசாரித்தார். பின்னர் என்னிடம், `நீ உனது கணவரை காதல் திருமணம் செய்து 3 குழந்தைகள் பெற்றுள்ளாய். நீ உயர்ந்த சாதி தானே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க, உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எனது ஆசைக்கிணங்க வேண்டும். இல்லையென்றால், உன் மனுவை விசாரிக்காமல் காலதாமதப்படுத்தி அலைக்கழிப்பேன்’ என்று கூறினார்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், “இதை நான் அழுதபடி வீட்டுக்கு வந்து, வெளிமாநிலத்தில் லாரி ஓட்டும் கணவரிடம் மொபைல் போன் மூலம் கூறினேன்” எனவும் கூறியுள்ளார். சுமார் 2 நிமிடங்கள் பேசும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சம்பவம் குறித்து உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.