தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை எச் வினோத் இயக்கியுள்ள நிலையில், கேவிஎன் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் இன்று வெளியாவதாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இன்று உடனடியாக ஜனநாயகன்  திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து சென்சார் வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்த நிலையில் அந்த வழக்கு விசாரணை தற்போது தொடங்கியது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு பல கேள்விகளை எழுப்பினார். அதாவது சென்சார் போர்டுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் எப்படி தனி நீதிபதி சான்றிதழ் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பாகவே எப்படி படத்தின் வெளியிட்ட தேதியை அறிவிக்க முடியும் என தயாரிப்பு நிறுவனத்திற்கும் கேள்வி எழுப்பியது.

பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது சான்றுக்காக பொறுமையாக காத்திருக்காமல் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்கக்கோரிய தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணையை வருகிற 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக உங்கள் விருப்பப்படி அனைவரும் செயல்பட முடியுமா என தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை தடை செய்தது. மேலும் இதன் காரணமாக ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீசாகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.