உலகளாவிய நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஹாலிவுட் தயாரிப்பில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபலமான ‘பவர் ரேஞ்சர்ஸ்’ (Power Rangers) தொடரை டிஸ்னி+ (Disney+) நிறுவனம் தற்போது புதிய வடிவில் உருவாக்கி வருகிறது. இதில், ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ‘ரீட்டா ரெபல்சா’ (Rita Repulsa) எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

டிஸ்னி ஸ்டுடியோவின் உத்தேசப் பட்டியலில் பிரியங்கா சோப்ராவின் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. எனினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பிரியங்கா சோப்ரா ஏற்கனவே 2017-ல் வெளியான ‘பேவாட்ச்’ (Baywatch) திரைப்படத்தில் ‘விக்டோரியா லீட்ஸ்’ என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருந்தார். மீண்டும் அவர் ஒரு மிரட்டலான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாரணாசி தொடர்பான ஒரு திரைப்படப் பணிகளில் பிஸியாக இருக்கும் பிரியங்கா, விரைவில் இந்த ஹாலிவுட் புராஜெக்டில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ’பவர் ரேஞ்சர்ஸ்’ கதைகளில் ரீட்டா ரெபல்சா கதாபாத்திரம் மிகவும் வலிமையான மற்றும் தந்திரமான வில்லி என்பது குறிப்பிடத்தக்கது.