இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்திற்கு நிலவி வந்த தணிக்கைச் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவிருந்த இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.
1960-களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தைப் பின்னணியாகக் கொண்ட இத்திரைப்படத்தில், அரசியல் ரீதியாகச் உணர்ச்சிகரமான பல காட்சிகள் இடம்பெற்றிருந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. தற்போது மத்திய தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘யு/ஏ’ (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து, திட்டமிட்டபடி நாளை உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி, இப்படத்தில் மொத்தம் 25 இடங்களில் காட்சிகள் மற்றும் வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘தீ பரவட்டும்’ என்ற புகழ்பெற்ற வாசகம் ‘நீதி பரவட்டும்’ என மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தி திணிப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய வசனங்கள், ‘இந்தி அரக்கி’ போன்ற வார்த்தைகள் மற்றும் குறிப்பிட்ட சில சாதி, இனத்தைக் குறிக்கும் சொற்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன அல்லது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய நீளம் கொண்ட இப்படத்தில், மொழித் திணிப்பால் ஏற்படும் பிரிவினையைச் சித்தரிக்கும் சில பின்னணி குரல்களும் மாற்றப்பட்டுள்ளன. பல கட்ட சோதனைகள் மற்றும் மாற்றங்களுக்குப் பிறகு இப்படம் திரைக்கு வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
