கொல்கத்தாவில் உள்ள தங்குமிட இல்லத்தில் 25 ஆண்டுகளாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது மகனைக் கண்டுபிடித்தும், மதம் சார்ந்த காரணங்களால் அவர் கைவிடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷிலா முர்மு (70). இவரது கணவர் இறந்த பிறகு, கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் இவர் மாயமானார். மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பினரால் மீட்கப்பட்ட இவர், கொல்கத்தாவில் உள்ள தங்குமிட இல்லத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்தார். ஆரம்பத்தில் நினைவாற்றல் இழந்திருந்த சுஷிலாவுக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் பலனாக, சமீபத்தில் தனது கிராமத்தின் பெயரை நினைவு கூர்ந்தார்.
தங்குமிட இல்ல ஊழியர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்த அமெச்சூர் வானொலி ஆபரேட்டர் அம்பிரிஷ் நாக் பிஸ்வாஸ் என்பவரைத் தொடர்பு கொண்டனர். அவர் சுஷிலாவின் புகைப்படத்தை தனது நெட்வொர்க்கில் பகிர்ந்து தேடியபோது, அவர் ஜார்க்கண்ட் மாநிலம் தஹுபகர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அங்கு அவரது மகன் மதன் பெஸ்ரா வசிப்பதும் உறுதி செய்யப்பட்டது.
வீடியோ கால் மூலம் தனது மகனிடம் பேசிய சுஷிலாவுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. சுஷிலாவின் கணவர் இந்து, ஆனால் சுஷிலா ஒரு கிறிஸ்தவர். திருமணத்திற்குப் பிறகும் அவர் தனது மதத்தை மாற்றவில்லை. இது குறித்து அவரது மகன் மதன் பெஸ்ரா கூறுகையில், என் தந்தையும் தாத்தாவும் இந்துக்கள். என் தாய் இந்து மதத்திற்கு மாறினால் மட்டுமே வீட்டில் இடமுண்டு. அவர் மதம் மாற மறுத்தால் வீட்டில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். நான் ஒரு இந்து, என் தாய் இப்போது மதம் மாறியே தீர வேண்டும்.”
தன்னைத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் மதம் மாற வேண்டும் என மகன் நிபந்தனை விதித்ததை சுஷிலாவும் உறுதிப்படுத்தினார். “நான் என் மதத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார். சுஷிலாவின் துயரம் குறித்து அறிந்த காவல் நிலையப் பொறுப்பாளர் மகாவீர் பண்டிட் கூறுகையில், “நான் நேரில் அந்த கிராமத்திற்குச் சென்று மகனிடம் பேசுவேன். பெற்ற தாயை அவர் ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான சமாதான முயற்சிகளை மேற்கொள்வேன்,” என்றார்.
மேலும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாயும் மகனும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதத்தின் பெயரால் ஒரு தாய் நிராகரிக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
