ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் துப்பாக்கி முனையில் மணப்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், அது மணப்பெண்ணே திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது ஹரிபந்து பட்டேலுக்கும், கராஷ்மி என்ற பெண்ணுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென ஒரு வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், மணமக்களின் காரை வழிமறித்தனர். கையில் துப்பாக்கியுடன் இறங்கிய அந்த நபர்கள், மணமகன் மற்றும் உறவினர்களை மிரட்டி, அனைவர் முன்னிலையிலும் மணப்பெண் ராஷ்மியை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் மணமகன் தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து மணமகன் ஹரிபந்து பட்டேல் தர்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துப்பாக்கி முனையில் கடத்தல் என்பதால் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது ராஷ்மியின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது. மணப்பெண் ராஷ்மியின் செல்போன் அழைப்புகள் மற்றும் கடத்தல் நடந்த இடத்திலிருந்த தடயங்களை வைத்து போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவல்கள் போலீஸாரையே அதிர வைத்தன.
உண்மையில் அங்கு கடத்தல் எதுவும் நடைபெறவில்லை. ராஷ்மிக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லாததால், தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். கடத்தலுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் ராஷ்மியே முன்னின்று வகுத்துக் கொடுத்தது விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். காதலனுடன் சேருவதற்காகப் புதுப்பெண்ணே கடத்தல் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
