ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ஒன்று இன்ஸ்டாகிராமில் உருக்கமான வீடியோவை வெளியிட்டுவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 16 வயது சிறுமி சோனி குமாரியும், ரமேஷ் (20) என்ற இளைஞரும் கடந்த சில காலமாகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டினருக்கும் தெரியவந்த நிலையில், அதற்கு இரு தரப்பு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் எதிர்ப்பால் மனமுடைந்த காதலர்கள், நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியேறினர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக, இருவரும் இணைந்து ஒரு வீடியோவைப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர். அதில், தங்கள் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுப்பதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ரமேஷின் செல்போன் சிக்னலை (Cell Phone Signal) ஆய்வு செய்தபோது, அவர் கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தின் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார், குளத்தின் கரையோரம் இருந்த மரத்தில் சோனி குமாரியும், ரமேஷும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
