பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் சாகிப் மாவட்டத்தில், ஒருதலைக் காதலால் இளம்பெண் ஒருவர் அவரது கணவர் கண்முன்னேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரூபி மேஹ்ரா என்பவருக்கும், அனுஷ் கொவர் என்ற இளைஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பாக, ரூபி வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த கரண் என்பவர், ரூபியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் ரூபியைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், ரூபி அதனைத் திட்டவட்டமாக மறுத்து அவருடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ரூபியும் அவரது கணவர் அனுஷ் கொவரும் ஸ்கூட்டரில் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் பின் தொடர்ந்த கரண், ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அவர்களது ஸ்கூட்டரை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கரண் தனது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அனுஷ் கொவரைத் தாக்க முயன்றுள்ளார். இதனைத் தடுத்துத் தனது கணவரைக் காப்பாற்ற ரூபி முன்வந்தார். அப்போது ஆத்திரமடைந்த கரண், துப்பாக்கியால் ரூபியைச் சரமாரியாகச் சுட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரூபி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ரூபியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பரபரப்பான சாலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அரங்கேறிய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கரணைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.