ஜப்பானின் கியோட்டோவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோடைஜி பௌத்த கோவிலில், ‘ஆண்ட்ராய்டு கன்னோன்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ துறவி உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 1 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ, பௌத்த மதத்தின் கருணைத் தெய்வமான போதிசத்வா அவலோகிதேஸ்வரரின் வடிவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலிக்கான் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்ட முகம் மற்றும் கைகளைக் கொண்டுள்ள இந்த ரோபோ, மனிதர்களைப் போலவே கண் சிமிட்டவும், கைகளைக் கூப்பி வணக்கம் செலுத்தவும் கூடியது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பௌத்த மத போதனைகளை எளிய முறையில் விளக்கி, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த ரோபோ துறவி, பௌத்த மதத்தின் மிக முக்கியமான ‘ஹார்ட் சூத்திரத்தை’ ஜப்பானிய மொழியில் உரையாற்றுவதுடன், அதன் ஆங்கிலம் மற்றும் சீன மொழி மொழிபெயர்ப்புகள் அருகிலுள்ள திரையில் காண்பிக்கப்படுகின்றன. இளம் தலைமுறையினரிடையே ஆன்மீக ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதற்காக இந்த புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மனிதர்களை விட அதிகத் தகவல்களைச் சேமித்து வைத்துத் துல்லியமாகப் பேசும் இந்த ரோபோ, காலப்போக்கில் செயற்கை நுண்ணறிவு மூலம் மக்களின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. மதத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் இந்த முயற்சி, ஜப்பானிய கலாச்சாரத்தில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
