ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பதற்றம், தற்போது ஒரு போர்ச் சூழலை எட்டியுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாலிபான் ஆதரவு பெற்ற குழுக்கள் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் நிலைகளை நோக்கித் தாக்குதல் நடத்தியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற போர் மூண்டுள்ளது. தாலிபான் அரசு பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது போன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், அண்டை நாடான ஈரான் இந்தப் பிரச்சினையில் தலையிடத் தொடங்கியுள்ளது. பிராந்திய அமைதியைக் கருத்தில் கொண்டு ஈரான் இந்தப் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதாகத் தெரிந்தாலும், அதன் பின்னணியில் தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஈரானிய தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் எல்லையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்காசியாவின் இந்த முக்கியப் பகுதியில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ஒருவேளை போர் வெடித்தால் அது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
